'விடைபெறும் வேளை' பற்றி ...

மின்மினி வெளிச்சத்தில் அடரிருட்காட்டில் இலக்கடைவேன் என நம்பிக்கை மொழி சொல்லும் திருக்குமரன் கவிதைகள். இழப்பின் வலியை தீனமான குரலில் அல்ல பாரதிதாசன் போன்று கனத்த குரலில் பதிவிடுகிறார். வார்த்தைகள் துள்ளல் போட அழகாய் அமைந்த கவிதைகள். ஆற்றொழுக்கென தமிழ்நடை.

 

நாமும் வேறுபாடுகளுடனே காதல் செய்கிறோம். விருப்புற்று திருமணம் செய்கிறோம். முரண்களை தின்று காலத்தைத் தீர்க்கிறோம். உடனிருக்க வழியன்றி வேறுபாதை போவதன் வலியை அமைதியான சூழலில் வாழும் நாம் புரிந்து கொள்வது கடினம். அது வழக்கமான விசயம் என்று செய்தி போல் சொல்லிப் போகும் இந்தக்கவிதை கொஞ்சம் நிம்மதியைக் குலைத்தது.

 

அவசியம் படிக்க வேண்டிய நல்ல கவிஞர்.

- சரவணன் மாணிக்கவாசகம்.

1.png

ஈழத்தின் மகத்தான கவிஞர் திருக்குமரன் அவர்களின் "விடைபெறும் வேளை” கவிதை தொகுப்பை வாசித்தேன். அற்புதமான கவிதைகள். “எம் வானின் தாரகைகள் " .....உணர்ச்சிகரமான பாடலாக இருந்தது.

 

போரின் தீவிரமும், உறவுகளை இழந்த துயரமும், தாய்மண்ணை பிரிந்த வலியும், இந்த கொடும் நினைவுகள் உருவாக்கும் தப்பிக்கவியலா தனிமையும் என்னை ஆக்ரமித்தது.

 

இவரின் மொழி நடையும் வார்த்தை தேர்வும் இவரின் கவிதைக்கு தனித்தன்மை தருகின்றன. கவிதை வாசிப்பின் புதிய அனுபவத்தை தரும் இந்த தொகுப்பை யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி.

 

போர்க்கால வாழ்க்கையை சொல்லும் படைப்புகளை மற்ற நாடுகளில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றுவது போல் இந்த " விடைபெறும் வேளை" கவிதை தொகுப்பை நாம் கொண்டாட வேண்டும்.

- எம் . எஸ். ராஜ் .