முனைவர் அரங்கராஜ் அவர்கள் கவிஞர் திருக்குமரனின் படைப்புகள் குறித்து 26.08.2019 அன்று கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய திறனாய்வுரை

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினருக்கு வணக்கம்!

தமிழ்க் கவிதை மரபு என்பது உலகக்கவிதை மரபின் வரலாற்றியல் அமைவில் பேரிடத்தினைப் பெற்றது. பொதுவாகவே ஒரு கவிதையானது இருவேறு நிலைகளில் தமது கருத்தினைச் செலுத்தும் வகைமையில் இயற்றப்படும். ஒன்று பாடப்படுவோன் கவியின் கருத்தினை உணருதற் பொருட்டு பிறிதொன்று பாடப்படுவோன் அல்லாத பிறர் உணருதற் பொருட்டு. இதனை ஒரு சான்றின் வழி அறியலாம். ஒரு வள்ளலின் கொடைத்திறம் பற்றி பாடப்படும் கவியானது பாடப்படுவோனின் புரிதலோடு பாடப்படுவோனால் விளங்கிக்கொள்ளப்படுதலோடு பிறராலும் உய்த்துத் தூய்க்க இவ்வாறான நினைவுக் கவிகள் அமையும். பிறிதொரு வகைமை யாதெனில் பாடப்படுவோன் அக்கவியின் இன்சுவையினை நுகரும் ஆற்றல் அற்றோராதல் என்பதுவாம். ஆயினும் அக்கவியானது பிறர்க்கு உணர்வுநிலையினை அளிப்பதாக அமையும். அவ்வகையில் ஒரு குழந்தையைக் குறித்துப் பாடப்படும் கவியானது அக்குழந்தைக்கு விளக்கத்தை ஏற்படுத்தாதாயினும் அதனைக் கேட்கும் பிறர்க்கு மகிழ்வினை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதே நிலையிலேயே அவலத்திலுள்ளோர் குறித்தும், தென்புலத்தார் குறித்தும், தெய்வம் குறித்தும் இயற்றப்படும் கவிகளும் அமையும்.

அண்மைக்காலங்களில் தமிழ்க் கவிதையியலின் வரலாற்றுப் போக்குகள் குறித்து ஆராய்வோருக்கு ஈழத்துக் கவிதையியல் மரபு என்பது இன்றியமையாததாக அமைகின்றது. புறத் திணையின் போரியல் இலக்கணங்கூறும் நூல்களான தொல்காப்பியப் புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை முதலான இலக்கண நூல்களும் கலிங்கத்துப்பரணி முதலாய இலக்கியங்களும் உண்டெனினும் காலவெளியில் சோழப்பெருவேந்தன் காலத்திற்குப்பின் தமிழகத்தில் காணக்கிடைக்காத போரியலும் அதன் அவலங்களையும் விளக்கி இயற்றப்பட்ட கவிதை மரபானது ஈழத்துக் கவிதைகளுக்கு மாத்திரமே உரித்தாக அமைகிறது. அவ்வகையில் ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபினை ஆய்கின்றபோது கவிதையின் ஈர்ப்பு, உணர்வுத் தூண்டல், மெய்மை, காட்சிப்படுத்தல், சொற்செறிவு, பொருள் விளக்கம், காலங்கடந்தும் உண்மை வெளிப்படுத்தும்பாங்கு, காலங்கடந்த கருத்தியல் உயிரோட்டமுடைமை, மொழிநிலையில் ஐந்திலக்கண அமைதியினைப் பேணுகின்ற சிறப்பு என்பன உத்திக் கூறுபாடுகளோடு ஈழத்துத்தமிழ்க் கவிதைகளானது ஒப்புநோக்கி ஆராயவேண்டியதாகின்றது. அவ்வகையிலேயே திருக்குமரனின் கவிகளில் சிலவும் எம்மால் ஆராயப்பட்டுள்ளனவெனலாம்.

ஒரு கவிஞன் போரியல் காட்சிகளைக் கண்டு கவிதை எழுதுதல் என்பது ஒருவகை. அவ்வகையிலேயே கலிங்கப்போரினை நேரிற்கண்டு செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியை இயற்றியதாகக் கூறுவர். ஒரு போராளியே கவிஞனாக இருப்பது போரின் தன்மையினையும், தான் அடைந்த துயரங்களையும், தமது இனம் அடைந்த இழப்புகளையும் கவிசெய்தல் மற்றொரு வகை. சங்கப்பாடல் மரபில் போரிலே தோல்வியுற்று எதிரியின் சிறைச்சாலையில் இருந்தபோது பெருஞ்சேரன் இரும்பொறை பாடிய பாடல் இதற்கு அமைவாகின்றது. முன்னவற்றிலும் பின்னவற்றில் கவித்துவத்தினைக் காட்டிலும் உண்மை மிகுந்திருக்கும். தமது வரலாற்றினைப் பதிவிசெய்யும் போக்குகள் ஒவ்வொரு அடியிலும் காணக்கிடைக்கும். இதனையே திருக்குமரனின் கவிதைகளில் காணலாம்.

சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ்த் தனிப்பாடல்களாகட்டும் சிலப்பதிகாரம் முதலான உரையிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்களாகட்டும் இவையாவுமே காட்சிப்படுத்துதலின் அடிப்படையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். காட்சிப்படுத்துதல் என்பது கவிஞனின் எண்ணத்தை ஓவியமாக்கி கேட்போர் கண்முன் படம்பிடித்துக்காட்டும் நாடகத்தன்மையில் அமைவது. சான்றாக “சுடர் தொடீ கேளாய்” எனும் கலித்தொகைப் பாடல் பல காட்சியமைப்புகளைப் படிப்போர்க்குக் கண்முன் நிகழ்த்திக்காட்டக் கூடியது. இது ஒரு படைப்பாளனின் புலமைத்திறனை வெளிப்படுத்தக் கூடியது. எளிதில் படிப்போனின் மனதிற்சென்று படைப்பாளனின் கருத்தைக் காட்சியாகப் பதியவைக்கக் கூடியது. இதனையும் பாரதியின் கவிகளில் காணலாம். ஈழத்துக் கவிதை மரபில் திருக்குமரனின் கவிதைகளிலும் காட்சியமைப்பின் உயிரோட்டத்தினை நன்கு உணரலாம்.

இவரது ஒவ்வொரு கவிதையும் தனித்த சிறப்பியல்புகளையுடையது. சங்க இலக்கிய மரபின் இழையை இவர் கவிதையெங்கும் காணலாம். “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” எனும் பாரிமகளிர் கவிகளில் தன்நாடு பிறர்கைக் கொள்ளப்பட்ட துயரும் தமது அடிமைநிலையும் தமது இனத்தின் துயரும் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கும். மெல்லிய இழையோடும் இக்காட்சியமைப்பை “நீவந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்” எனும் திருக்குமரனின் கவிதையடிகளெங்கும் காணலாம். இதனையொப்பவே இவரது “எப்படித்தான் மறப்பேனின் இந்நாளை” எனும் கவிதை அடிகளும் வெளிப்படுத்தும். இருவேறுபட்ட காலச்சூழலில் மிகுகால இடைவெளியில் வேறுபட்ட போர்ச்சூழலில் போர்க்களத்திலே நேரடியான பாதிப்புக்குள்ளான தாக்கத்தினால் எழுந்த ஒப்புமைக் கவிகளாக பாரிமகளிர் கவியையும் திருக்குமரனின் கவிகளையும் கருதலாம்.

ஓர் இளம்பெண் ஒரு மூதாட்டியின் சிறிய வீட்டிற்கு வருகின்றாள். அவ்வீட்டின் தூணினைப்பற்றி நின்று நின்மகன் எங்குள்ளான் என வினவுகின்ற காட்சியமைவில் “சிற்றில் நற்றூண் பற்றி” எனும் புறப்பாடல் ஒன்று உண்டு. இக்காட்சியமைவை ஒத்த காட்சிப்படுத்தக் கூடிய கவியமைதி மரபுகளை திருக்குமரனின் கவிதைகளில் பல விதங்களில் உணரலாம். “தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு” எனும் கவியினை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

“இறுதிக்கால இரவுகள்” எனும் கவிதையின் போக்கு எதிர்காலத்தில் வருவோருக்கு ஈழத்தின் துன்பியல் வரலாற்றினை உரைக்கும் இலக்கிய ஆவணமாக அமையும் தகைமையுடையது. புறநானூற்றில் மகட்கொடாமைத்துறையில் அமைந்த பாடலொன்றுண்டு. அப்பாடலின் வழி தொல்குடித்தமிழ்க் குழுக்கள் அழிக்கப்பட்ட துயர நிகழ்வினை உணரவியலும். அந்த மரபினைத் தொடர்ந்து அமைவதாக மேற்கண்ட பாடலடிகள் அமையக் காணலாம்.

புறப்பாடல்களைக் காட்டிலும் அகப்பாடல்களை இயற்றுவதற்கு உள்ளத்துணி தெளிவும் ஒரு படைப்பாளனுக்கு இன்றியமையாத குணமாகும். இத்துணிவினை சங்கப்பனுவல்களிலும் சில புலவர்களிடமும் மாத்திரம் காணவியலும். அதிலும் தங்களது அகம்சார்ந்த நிகழ்வுகளை அடையாளப்படுத்துதல் என்பது காலம் கடந்தும் சில நெருடல்களை வழங்குவதாக அமைந்துவிடும். தமிழ்மரபில் இதனை மிகத்துணிவோடு கையாண்டோர் மிகச் சிலரே. “யானே விரலி”, “புலவுநாறு கூந்தல்” முதலாய அடிகளை எழுதுவதற்கு காவற்பெண்டிற்கு இருந்த நேர்மைத்திறனும் துணிவும் திருக்குமரன் போன்ற கவிஞருக்கு உண்டெனலாம். இவரது “பனிப்புகை மனசுக்குள் படர்கிறது” எனும் கவிதையடிகள் இவரது அகவியற் கவிதைகளின் சிறப்பினை விளக்குவதாக அமைகின்றது.

திருக்குமரனின் கவிதைகளைப் பொறுத்தவரை ஆற்றொழுக்கான மொழிநடையினைக் காணலாம். சொற்கள் எளிதில் பொருள் விளக்கமுடையன. பேச்சுமொழியினை அடுக்கிவைத்துக் கவிதையென மொழியும் போலித்தன்மையற்ற ஓசைநயமுடையவை, தொடை அமைதி கொண்டவை என்பனவாக பல சிறப்புகளைக் கூறலாம். “Historical Setting in Akanaanuru” என சங்க அகப்பாடல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் பதிவுசெய்தே செல்கின்றன. அதற்கான காரணமாக ஒரு போராளியே படைப்பாளனாக இருந்தமையினைக் குறிப்பிடலாம். “வாழத்தெரியாதவன்” என இவர்கள் தங்களையே எழுதிக்கொண்டாலும் பிறர்தூற்றினாலும் இவர் போன்ற படைப்பாளிகளை வரலாறு வாழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. இவரது படைப்புகள் மொழிநிலையில் ஐந்திலக்கண ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். கருத்தியல் ஆய்வுகள், இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுகள், சொல், தொடர் ஆய்வுகள், வரலாற்று மொழியியல் ஆய்வுகள் முதலான பல்வேறு நிலையில் இவரது படைப்புகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்போது பல மேம்பட்ட கருத்தியல்களை வெளிக்கொணரலாம். இதற்கான பணிகளை கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முன்னெடுக்கும் என நம்பிக்கைகொண்டு எனது உரையினை நிறைவுசெய்கின்றேன்.

©  திருச்செல்வம் திருக்குமரன். 2021. 

அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன

  • wikipedia_PNG32
  • Blogger
  • Facebook
  • Instagram
  • YouTube

மொத்தப் பார்வைகள் 

This site was designed with the
.com
website builder. Create your website today.
Start Now