விழுங்கப்பட்ட விதைகள் பற்றி அ . மயூரன்

தமிழ் மொழியினதும், இனத்தினத்தினதும் நீண்ட வரலாற்றுத் தொன்மையை தமிழில் எழுந்த இலக்கியங்களே வெளிப்படுத்தி  நிற்கின்றன. இன்றைய நவீன வரலாற்று ஆய்வுகளுக்கு முந்திய காலகட்டத்தில் எந்தவொரு இனத்தினுடைய வரலாற்றையும் நோக்கவேண்டுமாயின் அவ்வின மக்களின் இலக்கியப்படைப்புக்களிலிருந்தே வரலாற்றைத் தேடவேண்டியிருந்தது. அந்தவகையில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழ் மொழி இலக்கிங்கள் பெருகிக் கிடப்பதைக் காணமுடிகிறது இவை படைப்பாளிகளின் உணர்வுகளையும், காலத்தையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன.

 

இதனால் தான் என்னவோ இலக்கியம் என்கின்ற போது இலக்கு - இயம் : அதாவது இலக்கைச் சொல்லுதல் ஒரு கவிஞனுடைய அல்லது படைப்பாளியினுடைய நோக்கத்தைச் சொல்லுதல் என விளக்கங் கொடுக்கப்படுகிறது.

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி ஆகவே ஒரு காலத்தில்; எழுந்த இலக்கியங்கள் அக்காலத்தின் சமகால நிகழ்வின் விம்பமாகவே காணமுடியும். தமிழ்மொழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த இலக்கியங்களும் சரி இன்றைய சமகால இலக்கியங்களும் சரி அந்தந்த காலச்சூழலை மிகத் தெளிவாக சித்தரித்துக் காட்டுவதை நோக்கமுடிகிறது.

 

தமிழிலக்கிய வரலாற்றில் சேழர்காலத்தினை பொற்காலம் என்கிறோம். ஏனெனில் அக்காலத்தில் காதல், செல்வம், வீரம் மலிந்து கிடந்தது. அங்கே கொடுப்பாரும் இல்லை கொள்வாருமில்லை. நாம் ஒரு பெரும் பேரரசின் சொந்தக்கரர்கள் என்ற பெருமித உணர்வு மக்கள் மத்தியில் பதிந்து கிடந்தது.

 

இத்தகைய சூழலில் எழுந்த இலக்கியங்களுக்கு சிறந்த கருப்பொருட்கள் கிடைத்தன. ஆகவே சோழர்காலப்படைப்பாளிகள் மிகக் கொடுத்து  வைத்தவர்களே. ஆனால் அவர்களுக்குப்பின் ஓராயிரம் ஆண்டுகால இடைவெளிக்கு ஏற்ற கருப்பொருட்கள் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு கிடைக்காமல் போயிற்றே ஆனால் கடந்த கால்நூற்றாண்டு ஈழத்துக் கவிஞர்களுக்கு எந்தப் படைப்பாளிகளுக்கும் கிடைக்காத மிக அருமருந்தன்ன கருப்பொருட்கள் கிடைத்தனவே. 

காதல், வீரம், சோகம், விரக்தி, கொலைக்களம் என எண்ணுதற்கரிய மனித வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத மன உணர்வுகள் ஈழத்துக் கவிஞர்களை ஆட்கொண்டதே அந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் இன்று எம்முன்னே விரிந்து கிடக்கும் விழுங்கப்பட்ட விதைகள் என்ற திருக்குமரன் கவிதையிலக்கியம். கடந்த கால தமிழீழ விடுதலைப் போராட்ட காலச்சூழ்நிலையை மிகத்தத்தூருவமாகத்தனது கவிவரிகளினால் வடித்திருக்கிறார். 

போரும் வாழ்வும் மனித இயங்கியல் விதியை உந்திச் செல்வதாயிற்றே. வரலாற்றை வாழவைப்பதற்கு வகுக்கப்பட்ட வழித்தடத்தைப் பின்பற்றி மனிதம் நகர்ந்து செல்கையில் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள் கவிதைகளாக பெங்கிப்பிரவாகித்துப்பாய்வதை இந்த நூலில் காண்கிறேன்.  

 

ஈழமக்களுடைய ஒன்றுபட்ட கலைஇலக்கிய வாழ்க்கையும் போர்க்கால இலக்கியப் பதிவுகளுமே போராட்டத்தின் உயிர்த்துடிப்புள்ள கருப்பொருட்களைக் படைப்பாளிகளுக்குக் கொடுத்ததனால் இவற்றின் துனையோடு போராட்டத்தை முன்னெடுத்து நகர்த்திச் செல்லவல்லதும், மக்கள் மனதைக் கவரக்கூடியதுமான புறப்பொருள் மரபின் வழியைப்பின்பற்றிய  தாயகக் கவி புதுவையின் கவி வரிகள் ஈழத்துப் புறநானூறாகத் தோற்றம் என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

அத்தகைய ஈழத்துப் புறநானூற்று பிரம்மாவின் கவிவரிகளை முலைப்பாலாக அருந்திய திருக்குமரனின்  உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு எத்தகையதோ?

 

இந்த கவிதை மலரை வியாசருடைய பார்வைகளுக்கூடாகப் பார்ப்பதிலே தான் பெருமைப்படுகின்றேன். இக்கவிதைகள்... புதுவையின் சாயலை ஒத்திருப்பதுவும், அவருடைய கவித்துவ ஆளுமையின் வீச்சு இந்தக் கவிஞனை எந்த அளவிற்கு ஆட்கொண்டிருக்கின்றது. என்பது திருக்குமரனின் கவிதைவரிகளினூடாகப் புலப்படுகின்றது. 

 

படைப்புக்களால் தான் பாதைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. படையல்களால் தான் தாளம் தவறாத மெட்டுக்கள் முளைவிட்டு எழுகின்றன. படைப்புக்களால் தான் சமுதாய நீரோட்டம் வீச்சம் பெறுகின்றன.

படைப்புக்களால் தான் என்னையும் உங்களையும் இணைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணக்கருவையும் எங்கிருந்தாலும் காலத்திற்கேற்ற கருத்துக்களைச் சொல்லிவிட வேண்டும் என்று துடிப்பும், எழுதத்துடிக்கும் இளைய தலைமுறைக்கு இந்தக் கவிஞர் ஓர் எடுத்துக்காட்டு.

 

விழுங்கப்பட்ட விதைகள்   ஆம்.... ஓர் சுதந்திரவிடியலுக்காக வீறுகொண்ட ஓர் இனத்தை அகிலமே தன்னுடைய ஆயுத பலத்தினால் பூனையால் உருட்டப்பட்ட சுண்டெலியாக சுருட்டி வாயிலே போட்டு விழுங்கி விட்ட மறுபக்கத்தின் அங்கலாய்ப்பு..........

 

தேசிய வாழ்வுக்கான அடித்தளத்து எண்ணங்களை, ஓன்றுபட்ட மக்களுடைய உணர்வுகளை, இலட்சிய உறுதிகளையும் நடந்துவந்த பாதைகளையும் விடுதலையின் வீரியங்களையும் அதர்மத்தின் முதலைவாயிலே ஆழ்ந்துகிடக்கும் ஓர் இனத்தினுடைய வலிசுமந்த வரலாற்றுப் பதிவுகள்......... போரின் வலிகளும் அவலங்களின் எழுச்சிகளும் திரும்புதலுக்கான வழித்தடங்களும் தமிழினத்தினுடைய நோக்கமும் சுவடுகளும் ஏன்? முள்ளி வாய்காலுள் மூடப்பட்டிருக்கும் எம்தேசத்துமக்களுடைய எதிர்பார்ப்புக்களும் நாளைய விடுதலையின் நம்பிக்கைகளும் விழுங்கப்பட்ட விதைகளாய் முழுமையோடு மொட்டு அவிழ்த்து முளைகிளப்பி நாளை முகடுகளைத்தொடுகின்ற காலப்பதிவுகளின் தூறலுக்காக இங்கே கவிகளாகக் காத்துக்கிடக்கின்றன............

 

''சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ''

 

என்ற தத்துவரிகளை............... முதல் கவிதை சொல்கிறது... அதுதான் சொல்லுக்குள்ளே எண்ணங்களின் இயக்கங்களையும், உணர்வுகளின் அசைவுகளையும் பதித்துவிட்டால், அது சமுதாய நீரைலைக்குள்ளே எதிர்நீச்சல் போட்டு இல்லாதவற்றை நிரப்பிவிடப்போகிறது.... 

"இது நடக்கும்"  என்ற கவிதையிலே  காலம் இடைவெளியை நிரப்பாமல் விட்டது கிடையாது. மானிட வாழ்வியல் ஓட்டம் எங்கேனும் தடைப்பட்டு நிற்கமாட்டா. அதன் வழித்தடம் முடிவின்றி தொடர்ந்து செல்லும் மனித இனத்தின் மானிட விடியலுக்கான போராட்டம் தொடர்ந்து செல்லும் அது எத்தகைய தடைகளையும், உடைத்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் இந்தக் கால ஓட்டத்தில் மிக அற்புதமான மனிதர்கள் வருவார்கள், போவார்கள், வரலாற்றுடன் சங்கமிப்பார்கள். சிலர் புதிய வரலாற்றைத் தொடக்கி வைப்பர். வரலாறு சிலரை தொடக்கிவைக்கும் இவ் மானிட இயங்கியல் வழித்தடத்தைப் பின்பற்றி மனித சமூகம் எதிர்கால வாழ்வுக்காக வீறுநடை போடும்.  

 

இவ் சமூக ஓட்டத்தை தன் கவிவரிகளினால்

 

'நீண்ட போராட்ட நெடுவழியில்

மண்ணுக்காய் மாண்ட வீரர்கள்

மனவலிமை தமிழினத்தின் ஓர்மத்தைத் தூண்ட

இடைவழியல் ஏற்படும் தடைகளெல்லாம்

சுக்கு நூறாகி காற்றோடு போக

வீரம் மிக்கதொரு புதிய படை தோன்றும்

விடுதலைக்கான பாதைகளை

விவேகமுடன் அமைக்கும்......'' 

 

என்ற ஓட்டத்தோடு 

 

'அன்று தான்திறந்த வானில் இருந்து பிறந்து வருவதுபோல்ஒருவன் இறங்கி வருவான்அவன் அடுத்த படை நடத்திச் செல்வான்'  

 

என தன் கவிவரிகளினால் புதிய தேசம் ஒன்றின் பிறப்பினை அதன் இயக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார் 

 

இவருடைய கவிவரிகள் இலக்கியப்பார்வையில் பார்ப்பவர்களுக்கு கவிச்சுவை மிகுந்த படைப்பாக பார்பர். சாமானியர்கள் மனதை நெகுழவைக்கும் கவிதை என்பர்.. இலட்சியவாதிகள் இனத்தின் அரசியல் அபிலாசை என்பர். எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமை வாதிக்கள் வரலாற்றின் எதிர்வு கூறலென்பர்.

 

ஆனால் இக்கவிஞனோ தன் மனஉணர்வுகளையும், தான்பட்ட வலிகளையும், தன்சமூகத்தின் துன்ப துயரங்களையும் அந்தச் சமூகம் எதிர்நோக்கி இருக்கின்ற வாழ்வியல் இடர்பாடுகளையும் இவற்றிற்கான தன் உள்ளார்ந்த தீர்வுகளையும், தன் கவிவரிகளினால் கொட்டித்தீர்த்திருக்கின்றார் என்றே சொல்லாம்.

 

ஆக மொத்தத்தில் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய பொக்கிசமாகும்.

- அ.மயூரன்.